tamilnadu

img

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் ஏன்? - கே.பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மருத்துவ இளங்கலைப் படிப்பிலும், முதுகலைப் படிப்பிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்லாண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இதனால்  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசின் இட ஒதுக்கீடு 1994 சட்டத்தினை அமலாக்கி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎம், சிபிஐ, திமுக, அதிமுக, திக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்பதால் அரசியல் பிரிவு 32ன் படி உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய முடியாது எனவும், மனுதாரர்கள் வழக்கினை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றத்தை அணுகிக் கொள்ளலாம் என்றும், இல்லையேல், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியது. எனவே, மனு செய்த கட்சிகள் வழக்கை வாபஸ் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அம்மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இடஒதுக்கீடு அடிப்படை உரிமைப் பிரச்சனையா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்த போதிலும், இப்பிரச்சனையில் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இயலாது என்ற கண்ணோட்டத்தில் மேற்க ண்டவாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இது எந்த அளவு நியாயமானது என்பதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது.

முந்தைய தீர்ப்புகள்

மருத்துவக் கல்வியில் மாநிலங்களில் உள்ள கல்லூரி இடங்களில் இளங்கலை (எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்) படிப்பில் 15 சதவிகிதமான இடங்களையும், முதுகலை படிப்பில் (எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்) 25 சதவிகிதமான இடங்களையும் ஒதுக்கிட வேண்டுமென உச்சநீதிமன்றம் 21.7.1986 அன்று தினேஷ்குமார் எதிர் மோதிலால் நேரு மெடிக்கல் காலேஜ் அலகாபாத் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பின்னர் முதுகலை படிப்பில் 25 சதவிகிதமான இடம் என்பது 50 சதவிகிதமாக 28.2.2005 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமலாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநிலங்கள் மத்திய தொகுப்புக்கு இடங்களை ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த இடங்களில் இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டும் என குறிப்பிடவில்லை. மேலும், அகில இந்திய அளவில் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு அமலாக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதுவே அரசியல் சட்டத்தின் படி ஏற்புடையது அல்ல. 

முதல் அரசியல் சட்டத் திருத்தம்

தமிழகத்தில் இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்ட போது, 1950ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டத்தின் விளைவாக இந்திய அரசியல் சட்டம் இட ஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மேற்கொண்டது. அரசியல் சட்டப்பிரிவு 15ல் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பிரிவு 4 என்பது சேர்க்கப்பட்டது. இந்த பிரிவை பயன்படுத்தியே நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம் 15 (4)க்கு விரோதமாக இட ஒதுக்கீடு இல்லா மல் மேற்கண்ட தினேஷ் குமார் வழக்கில் அகில இந்திய ஒதுக்கீட்டை உருவாக்கிட உத்தரவிட்டது. இதில், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ மருத்துவப் படிப்பில் மாநிலங்களுக்கான கல்வி இடங்களை மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்வது பற்றியோ அவ்வாறு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் இட ஒதுக்கீடு அமலாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ யாரும் கேள்வி எழுப்பாமல் விட்டது துரதிருஷ்டமானதாகும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 1986ம் ஆண்டிலிருந்து இந்த அகில இந்திய தொகுப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு நிறைவேற்றப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் அபேநாத் என்பவர் தொடுத்த வழக்கில், 31.1.2007 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி 2008ம் ஆண்டு முதல் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு இந்த அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. நம்மை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை வழங்க உத்தரவிட்டது முற்றிலும் சரியானது என்பதே.  ஆனால், கேள்வி என்னவென்றால் இட ஒதுக்கீடு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் நேரடி யாக வழக்கு தொடர இயலாது என்பது உண்மையானால், அபேநாத் வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் அதன் மீது தீர்ப்பு வழங்கியதும் எப்படி?

உச்சநீதிமன்றத்தின் முரண்பாடு

உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி என்பவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ படிப்பில் 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஒரு வழக்கினை 2015ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் மனுக்களை ஏற்றுக் கொள்ள இயலாது என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், 2015ம் ஆண்டு இதே கோரிக்கையை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ஏற்றுக் கொண்டு இப்போது வரையில் நிலுவையில் வைத்துள்ளது ஏன் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.

மேலும், இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் 2018ம் ஆண்டு அகில பாரதிய ஓ.பி.சி. மகா சங்கம் என்ற அமைப்பு ஒரு வழக்கினை தொடுத்தது. அந்த வழக்கில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 27சதமான ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென மனுவில் கோரியது. இந்த வழக்கினை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் 16.7.2018 அன்று இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென ஒரு இடைக்கால உத்தரவினை பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடும் கோரும் வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது எனவும், உச்சநீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறியது. தனது தீர்ப்புக்கு ஆதரவாக எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென கோரிய வழக்கில் 31.1.2007ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டியது. அத்தோடு இல்லாமல் இந்த அகில பாரதிய ஓ.பி.சி. மகா சங்கத்தினர் வழக்கை ஏற்க னவே நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி வழக்கை முடித்து வைத்து விட்டது. இவ்வாறு தீர்ப்பு எழுதிய நீதிபதிகளில் ஒருவர் நீதிபதி நாகேஸ்வர ராவ் அவர்கள். இதே நீதிபதி தான் தற்போது இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர முடியாது, உயர்நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமென உத்தர விட்டுள்ளார். ஒரே நீதிபதி இரண்டு எதிர் எதிரான தீர்ப்பு களை வழங்கியதற்கான சூட்சமும் புரிந்து கொள்ள முடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசியல் கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் அடிப்படையில் இயக்குநர் டாக்டர் பி. சீனிவாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணான பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.  சலோனி குமாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமான இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிய மனு நிலுவையில் உள்ளது. இந்த மனுவின் மீது அடுத்தக்கட்ட விசாரணை 8.7.2020 அன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் அளிக்கப்பட உள்ள மனுவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்கலாம் எனவும், அவ்வாறு வழங்கும் போது ஒட்டுமொத்தமான இடஒதுக்கீடு 50 சதமானத்திற்கு மேலே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும் எனவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்தே இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை உள்ளதால் உயர்நீதிமன்றம் இது குறித்து விசாரிக்கக் கூடாது என்ற வகையில் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அது எந்த நீதிமன்றம்?

இவரது வாக்குப்படி உச்சநீதிமன்றம்தான் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையில் உத்தரவிட முடியும் என்பது உண்மையானால் மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மத்திய கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும் இடங்களில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்ததும், அந்த ஆணையின் படி இட ஒதுக்கீடு அமலாக்குவதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, மத்திய அரசு அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதமான இட ஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு எந்த நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதே மத்திய நிறுவனங்களின் மருத்துவக் கல்விக்கான இடங்களில் மத்திய அரசின் ஆணையைப் பின்பற்றி ஓ.பி.சி. மாணவர்களுக்கு 27 சதமான இட ஒதுக்கீடு செயல்படும் மத்திய அரசு, மாநிலங்கள் அளிக்கும் மருத்துவ இடங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டுவது ஏன் என்பதே கேள்வி.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி உயர்நீதி மன்றத்தை தமிழக அரசியல் கட்சிகள் அணுகி உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு முரணாகாதா?.

மாநில இடங்கள் எப்படி  மத்திய இடங்களாகும்?

இயக்குநர் சீனிவாஸ் தனது பதில் மனுவில் பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் 27 சதமான இட ஒதுக்கீடு அளிக்கலாம் என பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மை என்னவெனில் மாநிலங்கள் தங்களுக்கான மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பிற்கு அளிக்கின்றன. ஒருவேளை தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு இடங்கள் அளிக்கவில்லை எனில் அந்த இடங்கள் முழுவதற்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு 69 சதமான இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயில வாய்ப்பு ஏற்படும். மாநிலங்களுக்கான மருத்துவ இடங்களை மத்திய தொகுப்புக்கு அளிப்பதாலேயே அந்த மருத்துவ இடங்கள் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடாது. ஏனெனில் இந்த இடங்களில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தான் பயில்கிறார்கள். அதற்கான கட்டமைப்பு, கல்வி, சோதனைக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மாநில அரசுகளே ஏற்கின்றன. மத்திய சுகாதாரத்துறை அந்த இடங்களில் பயில்வதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பை மட்டுமே நிறைவேற்றுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்கள் அளிக்கும் அந்த அகில இந்திய தொகுப்பான இடங்களில் அந்தந்த மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு கொள்கையை அமலாக்குவதே முறையானதாகும். இதை இந்திய மருத்துவக் கவுன்சிலின் மாணவர் சேர்க்கை குறித்த விதிகள் தெளிவுபடுத்துகின்றன. மருத்துவ இளங்கலை கல்வியில் மாணவர் சேர்க்கை குறித்த இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆணை 1997ன் படி “அந்தந்த மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு கொள்கையையே கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. இதே போல, மருத்துவ முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அரசாணை 2001ன் படியும் அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையே கடைபிடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநரின் பதில் மனுவில் 27 சதமான இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு ஒதுக்கும் போது, ஒட்டுமொத்தத்தில் 50 சதமான இடஒதுக்கீட்டிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு விகிதம் 50 சதமானத்திற்கு மேலே செல்லும்போது அதற்கு நிகரான மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மேற்கண்ட இடஒதுக்கீடு வழங்கும் போது தேவையான கூடுதல் மருத்துவ இடங்களை மாநில அரசு கள் அகில இந்திய தொகுப்புக்கு அளிக்க வேண்டும் என அர்த்தமாகும். இது மேலும் மாநிலங்களின் உரிமையை பறிப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களில் இட ஒதுக்கீடு மூலம் சலுகைகள் பெறுவதையும் தட்டிப்பறிப்பதுடன் மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.

70 ஆண்டுகளுக்குப்  பின்னரும்...

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத் திருத்தம் (முதலாவது திருத்தம்) நிறைவேற்றப்பட்டு 70 ஆண்டு களுக்கு பின்னரும் கல்வியில் இட ஒதுக்கீட்டு கொள்கை முழுமையாக அமலாக்கப்படவில்லை என்பது வேதனை யானதாகும். இது அரசின் நிர்வாகத் தோல்வியாக மட்டும் பார்க்க முடியவில்லை. காலங்காலமாக இந்திய சமூகத்தில் நிலவும் வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் பிடிமானமே தவிர வேறல்ல.



 

;